யாழ்ப்பாணம் வாயால் சொல்வதற்க்கு இனிமை வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அழகு. ஆனா மாறாத வடுக்களை சுமந்து நிற்கும் ஒரு தமிழர் தலை நகரம். எல்லாரும் யாழ்ப்பாணம் எண்ட உடன கொழும்பு கோட்டையில ஏறுறவங்க யாழ்ப்பானகோட்டையில தான் விழிப்பினம் போல இருக்கு.
இடையில் மாறாத சுமைகளையும் காயங்களையும் தாங்கும் தமிழர் இதய பூமியை மறந்து இருப்பவர்கள் எத்தனை பேர்? போயிட்டு வந்தவங்க யாரை கேட்டாலும் யாழ்ப்பாணம் இப்ப நல்ல டேவேலோப் எண்டுவாங்கள். இடையிலை நீங்க தாண்டி போற இடத்தையும் கொஞ்சம் பஸ் கண்ணாடிய விட்டு எட்டி பாருங்க.
யாழ் மக்களை விட செழிப்புடனும் தமது சொந்த வளங்களை பாவித்து தாமே முன்னேறிய மக்கள் ,பல வசதிகளுடன் வாழ்ந்த வன்னி மக்கள் தற்போது அடிப்படை வசதிகள் வாழ்விடங்கள் கூட இல்லாமல் துன்பத்தில் இருப்பதை அவதானிக்க முடிந்தது . அவர்களுடன் கதைத்த போது தமது சொந்த சோகங்களையே சொன்னார்கள் இப்பிடி கதைத்தாலாவது தமக்கு ஆறுதலாக இருப்பதாக கூறினர் .
முதலில் செட்டிக்குளம் அகதிகள் முகாமிற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. வைத்தியர்களுடன் சென்றதால் செல்ல முடிந்தது . வவுனியா நகரிலிருந்து சுமார் இருபத்தி ஐந்து கிலோ மீட்டர்கள் இருக்கும் . போன பாதை முழுவதும் இராணுவ பாதுகாப்பு. அவளவு தூரத்தில முள் கம்பி வேலிகளுக்குள் சிறைக்கைதிகள் போல மக்கள் . மக்களின் உடல்கள் மெலிவுற்று போதிய ஊட்டச்சத்து இன்றி காணப்பட்டனர். இராமநாத முகாம் போன்ற பெயர்களுடன் முகாம்கள். உதவிகள் செய்யவும் உத்தரவு பெறோனுமாம்.
அப்பிடியே ரோட்டால ஒரு எதிர்பார்ப்போட யாழ்ப்பாணம் நோக்கி போகும் போது அதுதான் நம்மட வடக்கின் வசந்தம் திட்டத்தின் அபிவிருத்தியை பார்க்க ஆவல் தான். முதல் வவுனியாவில இருந்து ஒரு பத்து கிலோமீட்டருக்கு என்னமோ ரோடு எல்லாம் நல்ல தான் இருந்திச்சு. அதுக்கு அப்புறம் பழைய மாதிரி தான் . மிச்சம் போடுறதுக்கு முயற்ச்சி கூட இல்லை . அப்பிடியே போனா கொஞ்ச நேரத்துல ரெண்டு பக்கமும் இராணுவ முகாம் தான். அநேகமா ஒவ்வொரு மீட்டருக்கும் ஒவ்வொரு பாதுகாப்பு அரண்(ரெண்டு பக்கமும்). அதிலயும் என்ன கொடுமை எண்டா அந்த அரண்களுக்கு பின்னால மக்களின் மீள் குடியேற்றம்.அது தான் நம்மட வடக்கின் வசந்தம் நிகழ்ச்சியின் ஒரு திட்டம். முகாம்களில் இருந்து அனுப்பப்பட்டதாக எங்களுக்கு கூறப்பட்ட மக்கள் வீதியோரத்தில் கேவலமாக இருக்கும் காட்ச்சிகள் காமேராவில் தட்டு பட்டவை.
அடிப்படை வசதிகள் இல்லாமல் வீதியோரங்களில் ,அதுவும் முழுவதும் இராணுவமயமாக்கப்பட்ட இடங்களில் இளம் தமிழ் பெண்கள் வீதியோரங்களில் வசிப்பது மிகவும் ஆபத்தானது. சிறுவர்களின் கல்விக்கு இன்னும் ஒன்றும் மேட்கொள்ளப்படாதது இன்னும் அதிர்ச்சி .
இதையெல்லாம் கடந்து போகேக்க மக்களின் உழைப்பால் வளந்த கிளிநொச்சி நகரம் எந்த ஒரு தடயமும் இல்லாமல் அழிக்கப்பட்டுள்ளது . எந்த ஒரு தொடர்பும் இல்லாமல் முன்னேறிய நகரம் . அழிவின் தடயங்கள் கூட சில தான் இருக்கு.
முதல் கிளிநொச்சி போயிட்டு பிறகு யாழ்ப்பாணம் போறதா தான் இருந்தது .நேரம் இல்லாததால முதல் யாழ்ப்பாணம் போனம். ஒரு வித உணர்வோடு ஆனையிறவு ,பளை எல்லாம் கடந்து யால்ப்பனதுக்குள் நுழையும் போது இந்த வாசகம் ... வாசகமெல்லாம் நல்ல தான் இருக்கு ஆனா அப்ரோச் தானேப்பா பிடிக்கேல்ல .
யாழ்ப்பாண நகரம் வழமை போல சன நடமாட்டம் கூட தான் . அவர்களுக்கு சந்தோசம்தான் பாதை திறந்து தங்கட உறவுகளை பார்க்க முடியுது . தாங்கள் சும்மா சும்மா கொழும்புக்கு போயிட்டு வரலாம் எண்ட சந்தோசம் தான் . தமது சந்தோசத்தில் வாக்களிக்க கூட தயார். நிறைய காலத்துக்கு பிறகு யாழ்ப்பாண நூலகம் போக முடிஞ்சது
சந்தோசம் தான்.
அங்கயிருந்த நூலக அதிகாரி ஒருவர் தன்னை பற்றியும் யாழ் மண்ணின் உண்மை நிலை பற்றியும் கூறினார்.(தலையில் கை வைத்த படியே)
எங்கட எல்லாம் போச்சு .எல்லாம் அழிஞ்சு போச்சு வன்னியில் இருந்து வந்தனான் எங்க குடும்பத்துக்கு ஒண்டும் ஆகேல்ல ஆனா கண்ணுக்கு முன்னால நிறைய உயிர்கள் போயிட்டுது .ஒரே குடும்பத்திலை யாருமே இல்லாத அநாதை பிள்ளைகள் கூட இருக்குதுகள். மனதால செரியா பாதிக்கப்படிருக்குதுகள். மற்றவை சொலுற மாதிரி நினைக்குற மாதிரி யாழ்ப்பாணம் இல்லை இங்கயும் கொடில்கள்ள வாழுதுகள். நாங்க முதல் ஒரு கிலோ அரிசி நூறு ரூபாய்க்கு கூட கிடைக்காம இருந்தனாங்கள். எண்டு சொன்ன அவருக்கு ஆறுதலாக என்னுடன் வந்த வைத்தியர்கள் ஆறுதல் கூறினார். எதோ தம்பி சொன்னதால கொஞ்சம் மனசுக்கு ஆறுதல் எண்டார்.
இத்தனை சுமைகளை தாங்கி நிக்கும் வன்னி மண் யாழ்ப்பாணம் எண்ட வெளிப்பூச்சில மறைஞ்சு போனதும் மக்கள் மறந்து போனதும் தான் கவலை .
1 comments:
கிளிநொச்சி மீள்குடியேற்றம் அதன் பின்னான மக்களின் இயல்பு வாழ்வு என்றெல்லாம் பல்வேறு செய்திகள் நாளுக்கு நாள் வெளிவந்தாலும் உண்மையில் கிளிநொச்சியின் நிலைப்பாடு தொடர்பில் வெளி உலகிற்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
கிளிநொச்சி என்றால் அனைவரது கண்முன்னே விரியும் செழுமை நவீனமும் தொன்மையும் கலந்த நகர், கோவில்கள், அழகிய வயல்வெளிகள் அழகான தமிழ்ப்பெயர்கள், என எண்ணற்றவற்றைக் கூறலாம். அத்தகைய கிளிநொச்சியின் தற்போது இருக்கும் நிலைதான் வேதனைக்குரியது.
கிளிநொச்சியின் பிரதான அதாவது ஏ-9 வீதியின் இரு மருங்கிலும் காணப்பட்ட பெருமளவான கட்டடங்கள் திட்டமிட்டு சிதைக்கப்பட்டுள்ளன. அனைத்துப் பகுதிகளிலும் பெருமளவான சிங்கள இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
முன்னர் கிளிநொச்சியில் செயற்பட்டு வந்த பேருந்து தரிப்பு நிலையம் இருந்த இடம் இல்லாமல் அழிக்கப்பட்டுள்ளது. அதேபோல தமிழ் மக்களது தொன்மையை வெளிப்படுத்தும் வகையில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருட்களை காட்சிப்படுத்துவதற்காக டிப்போ சந்திப்பகுதியில் அமைக்கப்பட்டு வந்த அரும்பொருட்காட்சியகம், லெப்.கேணல் சந்திரன் பூங்கா, சேரன் மற்றும் பாண்டியன் சுவையூற்றுக்கள் தரைமட்டமாக்கப்பட்டதுடன், சந்திரன்பூங்கா அமைக்கப்பட்ட இடத்தில் பாரிய அளவிலான இராணுவ தூபி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. தமிழீழ மாவட்ட நீதி மன்றக் கட்டடமும் முற்றாக இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்டுள்ளது. முன்னைய கிளிநொச்சியின் நினைவு யாருக்கும் வரக் கூடாது என்ற நோக்கிலான செயற்பாடுகளே அங்கு இடம்பெற்றுள்ளன.
கிளிநொச்சியின் மத்தியில் இருந்த கிறிஸ்தவத் தேவாலயமும் சிதைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று கிளிநொச்சி காவல்ப்பணிமனையினை இராணுவத்தினரின் உணவகமாக மாற்றியமைத்துள்ளனர். அதில் பணியாற்றும் எந்த இராணுவத்தினருக்கும் தமிழே தெரியாது என்பதுதான் அடுத்த விடயம். இதனை விடவும் கிளிநொச்சியில் இருந்து இடம்பெயர்ந்து ஏனைய மாவட்டங்களில் வசிக்கும் ஆசிரியர்களை கிளிநொச்சி கல்வி வலயத்திற்கு கட்டாயம் வருமாறு விடுக்கப்பட்ட அழைப்பி;ன் காரணமாக ஆசிரியர்கள் தொடர் பயணங்களை மேற்கொள்ளவேண்டிய அவல நிலையில் காணப்படுகின்றனர். இவர்களில் பெண்கள் மற்றும் வயது முதிர்ந்த ஆசிரியர்களின் நிலைப்பாடு என்பது வேதனை அளிப்பதாகவே உள்ளது.
இதே போன்று அரச செயலகம் மற்றும் பிரதேச செயலகம் ஆகியவற்றுக்கும் இவ்வாறான நிலையே காணப்படுகின்றது. முகாம்களில் இருந்து கிளிநொச்சிக்கு மீள் குடியமர்வுக்காக கொண்டு வரப்படுகின்ற மக்கள் ஒரு வாரகாலமாக பிரதான வீதியை அண்டிய பாடசாலைகளில் வைத்து மீண்டும் கடும் கெடுபிடிகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். அதேவேளை அவர்கள் அதன் பின்னர் மீள் குடியேற்றம் என்ற போர்வையில் இராணுவ நிலைகளுக்கு அருகருகாக தகரங்கள் வழங்கப்பட்டு சிறிய கொட்டில்களில் வசிக்க மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். மிகச் சிலரே தமது வீடுகளில் குடியமர அனுமதிக்கப்படுகின்றனர். பெருமளவான மக்கள் இராணுவ முகாம்கள் காரணமாக தமது சொந்த வீடுகளையோ, காணிகளையோ சென்று பார்வையிடக் கூட அனுமதிக்கப்படாமல் உள்ளனர்.
இராணுவத்தினர் தாமே தொலைத்தொடர்பு நிலையங்களை அமைத்துள்ளனர். கைத்தொலைபேசி பயன்படுத்துவோர் தமது பற்றறிகளை ஒரு முறை சார்ஜ் செய்வதற்கு இராணுவத்தினருக்கு தலா 50ரூபா செலுத்த வேண்டிய நிலை காணப்படுகின்றது. கிளிநொச்சியில் குடியமர்த்தப்பட்ட எந்த ஒரு தனி நபருக்கும் விற்பனை நிலையங்களை அமைப்பதற்கான அனுமதி இன்னமும் வழங்கப்படவில்லை என்பது இராணுவத்தினரின் வியாபார நோக்கிலான செயற்பாட்டை பகிரங்கப்படுத்துவதாக அங்கிருக்கும் வர்த்தகர் ஒருவர் தெரிவித்தார்.
கனகபுரம், ஜெயந்திநகர், உதய நகர் போன்ற பகுதிகளுக்குச் செல்லும் பிரதான வீதியான கனகபுரம் தெருவில் முன்னர் சந்தை அமைக்கப்பட்டிருந்த இடத்தில் இராணுவச் சோதனை முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அதனூடாகச் செல்லும் ஒவ்வொருவரும் இராணுவ அனுமதி அட்டை வைத்திருக்க வேண்டும். வெளி இடங்களில் இருந்து தமது பகுதிகளுக்கோ உறவினர்களின் வீடுகளுக்கோ செல்வதாக இருந்தால் அங்கு மீளக் குடியமர்த்தப்பட்டவர்கள் அவர்களை பிணை எடுத்துச் செல்வதுடன் அவர்களை பிற்பகல் 4மணிக்கு முன்பாக வெளியேற்றிவிடவேண்டும். இதனால் தூர இடங்களில் இருந்து கிளிநொச்சி நோக்கிச் செல்வோர் பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர்.
இதனை விடவும் கிளிநொச்சி திருநகர் வீதி முற்றாக மூடப்பட்டு அங்கு பாரிய இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழர் புனர்வாழ்வுக் கழகக் கட்டம் முழுமையாக பாரிய இராணுவ முகாமாகப் பயன்படுத்தப்படுகின்றது. கரடிப்போக்கு, பரந்தன் சந்திப்பகுதிகளில் உள்ள அரச மரங்களின் கீழ் பாரிய அளவிலான விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
Post a Comment