தொடருபவர்கள் - நன்றிகள்

Wednesday, August 31, 2011

மங்காத்தா - விமர்சனமல்ல எனது பார்வை

இது ஒரு வியாபார நோக்க படம் என்பதால் விமர்சனம் அல்லாது எனது பார்வையிலேயே கருத்தை தெரிவிக்கிறேன் .

மங்காத்தா முழுக்க முழுக்க ஒரு வியாபார நோக்கம் கொண்ட அதிரடி திரைப்படமாக இருந்தாலும் வெங்கட்பிரபு தனது பாணியில் இருந்து மாறவில்லை . சீரியசான காட்சிகளும் புன்னகையை தந்துவிட்டு போகின்றன .

முதலில் அஜித்தின் மாறுதலுக்கு வாழ்த்துக்கள் . அசலில் (படம் வெற்றி அடையாவிட்டாலும் ) மற்ற நடிகர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருந்தார் .அதே இந்த திரைப்படத்திலும் அனைத்து நடிகர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது . இதன் கதை திரைக்கதை என அனைத்திலும் இயக்குனர் தான் . இதை முழுக்க முழுக்க இயக்குனர் படமாக பார்க்க முடிவது தமிழ் சினிமாவின் வெற்றி எனலாம் .


கதை இல்லை -தேவையுமில்லை (திரைக்கதை சிறப்பு )

கிரிக்கெட் சூதாட்ட பணத்தை அனைவரும் திட்டமிட்டு கொள்ளை அடிப்பது தான் கதை என ஒரு வரியில் சொல்லிவிடலாம். படத்தின் ற்றேயிலரில் கூட கதை தெரிந்துவிடும் . சில திருப்பங்கள் ,எதிர்பாராத விடயங்கள் திரைக்கதை மூலம் திரைப்படத்தை சிறப்பாக கொண்டு சென்றிருக்கின்றன .ஆரம்பத்தில் திரைக்கதை சோர்வு என்றாலும் பின்னர் நன்றாக இருந்தது .

முக்கியமாக அஜித்தின் நடிப்பு சிறப்பாக இருந்தது .அஜித்தின் கதாப்பாத்திரத்தை அழகாக வடிவமைத்திருக்கிறார் வெங்கட்பிரபு . 


காட்டப்படாத பக்கம்(இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் ) 

கிரிக்கெட்டின் பின்னால் நடைபெறும் சூதை காட்டியது பாராட்டத்தக்கது. ஆனால் இந்த சூதுகளின் பின்னணியோ அல்லது இந்த சூதுகள் ஒரு ஆட்டத்தை எப்படி மாற்றி அமைக்கிறது என்பதை காட்டி இருந்தால் நன்றாக இருக்கும் . இப்படி நடைபெறும் சூதுகள் மூலம் தான் ஒவ்வொரு அணி வீரர்களும் விலைக்கு வாங்கப்படுகிறார்கள். அவர்கள் தான் போட்டியின் திசையையும் மாற்றுகிறார்கள் .

பின்னால் புரளும் பல கோடிக்கணக்கான பணம் ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் பார்க்கும் எமக்கு புரியப்போவதில்லை . கிரிக்கெட்டின் இந்தப்பக்கத்தையும் காட்டியிருந்தால் பலருக்கு தெரிந்திருக்கும் .

படத்தின் குறைகள் 

யுவனின் பின்னணி இசை அருமை .பாடல்கள் தேவை இல்லாத இடங்களில் வருகிறது . கண்ணாடி நீ பாடல் தேவையில்லாமல் வருகிறது . இடைவேளைக்கு முன்னர் சில இடங்களில் கொட்டாவி வருவதை தடுக்க முடியாது .இன்னமும் பெண்களை மோகப்போருளாக மட்டும் பயன்படுத்துவது  சலிப்பை ஏற்படுத்துகிறது . தொடர்ந்து அதே அணியுடனேயே படம் எடுப்பதும் சலயொப்பை ஏற்படுத்துகிறது .

  மங்காத்தா அஜித் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் பலரும் ரசித்து பார்க்க கூடியதாக இருக்கும் . மொத்தத்தில் ஒரு நல்ல அதிரடி திரைப்படம் பார்த்த மகிழ்ச்சியை கொடுக்கும் .

Thursday, August 11, 2011

தமிழர் அறிவுத்தளத்தில் இணைவதற்கான அழைப்பு

கற்பிப்போம் ,நாமும் தெரிந்துகொள்வோம் 

தமிழ் உறவுகளுக்கு வணக்கம் ,

தமிழர்களுக்கென்று அறிவு சார்ந்த தளம் இணையத்தில் இல்லை என்பதை கருத்தில் கொண்டும் எம் சமூக வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள தளம் இது . http://www.ewow.lk/


இந்த தளத்தின் நோக்கம் அறிய இந்த கட்டுரைக்கு செல்லலாம் : எதற்காக இந்த தளம் ? நோக்கம் ?


இதில் எந்தவிதமான பங்களிப்பையும் நீங்கள் செய்யவும் முடியும் .ஆக்கங்களை நீங்கள் உள்ள துறையிலும்/விருப்பமான துறையிலும் எழுதலாம் .   பாடங்கள் வீடியோவில் கற்பிக்கக் கூடியவராக இருந்தால் கற்பிக்கலாம் .பிடித்தமான எந்த பகுதிக்கும் நீங்கள் பங்களிக்கலாம் . 

உங்களுக்கு தெரிந்த எந்த விடயமாக இருந்தாலும் அது சமூகத்துக்கு பயனுள்ளதாக இருந்தால் பகிரவும் .அனைவருக்கும் சொல்லிக்கொடுக்கலாம் . அரசியல் சினிமா தொடர்பான எதுவும் இருக்க மாட்டாது .

அனைவரும் ஒன்றிணைந்தால் தான் இந்த தளத்தை தரமானதாகவும் மேலும் வளர்ச்சி பாதையிலும் கொண்டு செல்ல முடியும் .  எம்முடன் இணைய விரும்புபவர்கள் இந்த முகவரியினூடு தொடர்புகொள்ளவும் . 
 wowe@ewow.lk


தமிழை இணையத்தில் ஏற்றவேண்டும் விருப்பம் .செயற்பட வேண்டும் .ஆனால் நேரமில்லை ..என்ன செய்வது ?


நீங்கள் கிழமைக்கு ஒரு ஆக்கமா ,அல்லது மாதத்திற்கு ஒரு ஆக்கம் கூட அனுப்பலாம் .தொடர்ந்து முழு நேரமாக இருக்க வேண்டும் என்று இல்லை .

உங்களது சுய விபரத்தை அனுப்பி வைக்கவும் .உங்கள் படைப்புகள் சிறப்பாக இருந்தால் தொடர்புகொள்வோம்.
=================
தளம் வைத்திருப்பவர்களுக்கும் பதிவர்களுக்கும் ....

இலவசமாக தமிழர்களின் அறிவு சார்ந்த  தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில், எம்மால் ஆரம்பிக்கப்பட்டுள்ள www.ewow.lk இணையத்தளத்தை உங்கள் தளங்களிலும் ஒரு சிறிய விளம்பரம் மூலம் பகிர்ந்துகொண்டு எம்மை ஊக்கிவிக்கவும்.
எமது தளத்தின் சேவைகள் பிடித்திருப்பவர்கள் மட்டும் இந்த உதவியை செய்யவும்... ஏனையவர்கள் குறைகளை எம்மக்குத்தெரிவிக்கவும் .

எம்முடன்  இணைந்து செயலாற்ற நினைப்பவர்களும் தொடர்பு கொள்ளலாம் .
தளம் :
http://www.ewow.lk/

பேஸ்புக் பக்கம் :
http://www.facebook.com/ewowlk



- நன்றி
EwOw Team
இதற்கான இணைப்பை உங்கள் தளங்களில் கொடுக்க 

மங்காத்தா பாடல்களில் ரசித்தவை -இனிமையான வரிகளின் நினைவுகள்

அண்மையில் வெளியான மங்காத்தா பாடல்களில் மென்மையான பாடல்கள் இரண்டு ரசிக்க கூடியதாக இருந்தது . ஒன்று என் நண்பனே ,மற்றொன்று கண்ணாடி நீ கண் ஜாடை நான் . "என் நண்பனே" பாடலின் வரிகளுக்கு கவிஞர் வாலி பலம் ,பாடலுக்கு யுவனின் குரல் பலம் .
கண்ணாடி நீ கண் ஜாடை நான் பாடலுக்கு நிரஞ்சன் பாரதியின் வரிகளில்   சரணின் குரலும் ,பவதாரனியின் குரலும் சிறந்த மெல்லிசை பாடலை தந்திருக்கிறது .பாடலை கேட்க்க 

கண்ணாடி நீ கண் ஜாடை நான்
என் வீடு நீ உன் ஜன்னல் நான்
என் தேடல் நீ உன் தேவை நான்
என் பாடல் நீ உன் வார்த்தை நான்
என் பாதி நீ உன் பாதி நான்
என் ஜீவன் நீ உன் தேகம் நான்
என் கண்கள் நீ உன் வண்ணம் நான்
என் உள்ளம் நீ உன் எண்ணம் நான்


என் மேனி நீ உன் ஆடை நான்
என் பேச்சு நீ உன் மேடை நான்
என் பாதை நீ உன் பாதம் நான்
என் தென்றல் நீ உன் வாசம் நான்
 நான் தான் நீ என்பதை சற்று வித்தியாசமாக வரிகளில் காதல் கலந்து இருக்கும் வரிகள் இவை . இதனை எழுதியவர் கவிஞர் நிரஞ்சன் பாரதி அவர்கள். இவர் வேறு யாரும் அல்ல மகாகவி பாரதியாரின் இரத்தவழி உறவு  . மகாகவியின் ஆசீர்வாதம் எப்போதும் இருக்கும் . இந்த தலைமுறைக்கு ஏற்ற படி காதல் கலந்து கொடுத்திருக்கும் வரிகள் இவை .அவரின் எதிர்கால தமிழ் வரிகளின் பயணம் சிறப்புற வாழ்த்துகள் .

ஆனாலும் இந்த பாடலை கேட்க்கும் போது மகாகவியின் அருமையான தமிழ் வரிகளை நினைவுபடுத்தின . ஆனால் அவரின் வரிகளில் காதலுடன் தெய்வீகமும் இருந்தது . அதனையும் இங்கே பகிர்கிறேன் . தமிழ் சுவையும் கூடவே கலந்திருக்கும் . கவிராஜன் பாரதியின் வரிக்கு இசைராஜா இளையராஜா கொடுத்த இசை இது . பாடல் கேட்க்
 

பாயு மொளி நீ யெனக்கு,பார்க்கும் விழி நானுனக்கு,
தோயும் மது நீ யெனக்கு,தும்பியடி நானுனக்கு.

வாயுரைக்க வருகுதில்லை,வாழி நின்றன் மேன்மையெல்லாம்;
தூயசுடர் வானொளியே! சூறையமுதே!கண்ணம்மா!

வீணையடி நீ யெனக்கு,மேவும் விரல் நானுனக்கு;
பூணும் வடம் நீ யெனக்கு,புது வைரம் நானுனக்கு;

காணுமிடந்தோறு நின்றன் கண்ணி னொளி வீசுதடீ
மாணுடைய பேர ரசே! வாழ்வு நிலையே!கண்ணம்மா!

வான மழை நீ யெனக்கு வண்ண மயில் நானுனக்கு;
பான மடி நீ யெனக்கு,பாண்டமடி நானுனக்கு;

ஞான வொளி வீசுதடி,நங்கை நின் றன் சோதிமுகம்,
ஊனமறு நல்லழகே!ஊறு சுவையே!கண்ணம்மா!

வெண்ணிலவு நீ யெனக்கு,மேவு கடல் நானுனக்கு;
பண்ணு சுதி நீ யெனக்கு,பாட்டினிமை நானுனக்கு;

எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமில்லை நின்சுவைக்கே;
கண்ணின் மணி போன்றவளே! கட்டியமுதே!கண்ணம்மா!

வீசு கமழ் நீ யெனக்கு,விரியுமலர் நானுனக்கு;
பேசுபொருள் நீ யெனக்கு,பேணுமொழி நானுனக்கு;

நேசமுள்ள வான்சுடரே! நின்னழகை யேதுரைப்பேன்?
ஆசை மதுவே!கனியே!அள்ளு சுவையே கண்ணம்மா!

காதலடி நீ யெனக்கு,காந்தமடி நானுனக்கு;
வேதமடி நீ யெனக்கு,வித்தையடி நானுனக்கு;

போதமுற்ற போதினிலே பொங்கி வருந் தீஞ்சுவையே!
நாதவடி வானவளே! நல்லஉயிரே கண்ணம்மா!

நல்லவுயிர் நீ யெனக்கு,நாடியடி நானுனக்கு;
செல்வமடி நீ யெனக்கு,சேமநிதி நானுனக்கு;

எல்லையற்ற பேரழகே!எங்கும் நிறை பொற்சுடரே!
முல்லைநிகர் புன்னகையாய்!மோதுமின்பமே!கண்ணம்மா!

தாரையடி நீ யெனக்கு,தண்மதியம் நானுனக்கு;
வீரமடி நீ யெனக்கு,வெற்றியடி நானுனக்கு;

தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்
ஓருருவமாய்ச் சமைந்தாய்!உள்ளமுதமே!கண்ணம்மா!


வாலியின் வரிகளில் எப்போதும் தமிழ் சொற்கள் விளையாடும் . என் நண்பனே பாடலில் வந்த வளைக்கையை  பிடித்து வளைக்கையில் விழுந்தேன் வலக்கரம் பிடித்து வலம்  வர  நினைத்தேன் . வரிகள் காதலெனும் தேர்வெழுதியில் நான் ரசித்த இந்த வலக்கையில் வளையல்கள் நானல்லவா இன்று வலக்கையை வளைக்கின்ற நாளல்லவா வரிகளை நினைவுபடுத்தியது. 

Tuesday, August 9, 2011

நேரத்தில் விஜயின் நெடும்பயணம்- கி பி 2050

திண்ணை இணைய வாரப்பத்திரிகையில் வெளியான எனது கதை ...
http://puthu.thinnai.com/?p=3070

பாரிய அணு உலைகள் ,செயற்கை பசுமை, பறக்கும் மின்சார வாகனங்கள்  என  கி .பி 2050 இல் ஒரு இயந்திரச்சாலை போலவே  காட்ச்சியளித்தது ஜப்பானின் தலைநகரம் டோக்கியோ .இயந்திரங்களிடையே சில சில இடங்களில்  மனித நடமாட்டமும் இருந்தது .மனிதர்கள் புன்முறுவலுடனும் ஆச்சரியம் கலந்த முகத்துடனும் ஆங்காங்கே குழுக்களாக நின்று சாலையின் பாரிய திரைகளில் செய்தியை பார்த்துக்கொண்டிருந்தார்கள் .

அவர்களின் எதிர்பார்ப்பு, மகிழ்ச்சிக்கு காரணம் உலகையே தமது பக்கம் திருப்பும் வேலையில் அவர்களின் விஞ்ஞானிகள் ஈடுபட்டுக்கொண்டிருப்பது தான் .

 மத்திய விஞ்ஞான தொழில்நுட்ப மையத்தில் மும்முரமாக வேலைகளில்  ஈடுபட்டிருந்த விஜய்க்கு, இருந்த இடத்தில் ரோபோக்களின் உதவியால் உடல் அசையாத வேலை என்றாலும் மூளை படுவேகமாக இயங்கிக்கொண்டிருந்தது . காரணம் அடுத்த நாள் ஒளியின் வேகத்துக்கு இணையாக செல்லவிருக்கும் விண்வெளிக்கப்பல்  பயணத்திற்கு தயார்நிலையில் ஒரு குழுவே இயங்கிக்கொண்டிருந்தது .அதில் தொழில்நுட்பத்தை பரிசோதிக்கும்   பொறுப்பு விஜய்யிடம் இருந்ததால் குட்டித்தூக்கம் போட கூட நேரமில்லை .

இருந்தாலும் அங்கு வேலை செய்பவர்களுக்கு இத்தனை மணித்தியாலங்கள் கட்டாயம் உறங்கவேண்டுமென்று கட்டுப்பாடு இருந்தது.அங்கேயே சாய்ந்திருக்கும் கதிரையில் படுத்துக்கொண்டு ஒரு பொத்தானை அழுத்தியதும் கதிரையில் ஒரு வித அதிர்வு தொடர்ந்து இருக்க,இன்னொரு பொத்தானை அழுத்தி எழ வேண்டிய நேரத்தையும் பதிந்துவிட்டு  அப்படியே உறங்கிவிட்டான்  .

குறித்த நேரத்தில் எழுந்து வேகமாக இயங்க தொடங்கினார்கள் அவர்கள் .புறப்படும் நேரமும் நெருங்கிக்கொண்டிருந்தது .இறுதி செக்கன்கள் வரை தனது நோக்கம் தவிர வேறு எந்த நினைவுகளும் அவன் தலையை தட்டிப்பார்க்கவில்லை  .3 ,2 ,1 என செக்கன்கள் கணணி திரையில் எண்ணப்பட்டு முடிந்ததும் தனது விலங்குகளை அவிழ்த்து புறப்பட்டது விண்வெளிக்கப்பல் .

திணிவின்  காரணத்தால் உடனடியாக வேகத்தை ஆர்முடுக்க  முடியவில்லை . ஆனாலும் சிறிது நேரத்தில் தனது முழு இயந்திர சக்தியையும் பயன்படுத்தி கூடிய வேகத்தை பெற்றுக்கொண்டு பல மைல் தூரம் சென்றது  .ஒருவாரத்தில் கிரகங்களை தாண்டி செல்லத்தொடங்கியது .கிட்டத்தட்ட ஒரு வருடத்தின் பின் ஒளியின் வேகத்தின் அரைவாசியை பெற்றுக்கொண்டு சூரிய குடும்பத்தையும் தாண்டி விட்டது  .

உள்ளேயும் பல தொழில்நுட்ப வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டிருந்த விஜய்க்கு அவ்வப்போது தனது அப்பா ,மகன் பற்றிய சிந்தனை  எட்டிப்பார்க்கும்  .சில வருடங்களாக அவன் தனது தந்தையை பார்க்கவில்லை .இறுதியில் கூட அவன் அவரிடம் சொல்லிவிட்டு வரவில்லை .
அவன் காதல் மனைவி விபத்தில் இறந்து விட்டதால் தனது தந்தையிடமே தனது மகனை பராமரிக்கும் பொறுப்பை கொடுத்துவிட்டு வானியல் ,தொழில்நுட்பம்  என்று மூழ்கிவிட்டான் .

மனைவி இறந்ததை நினைத்துக்கொண்டு தனது வானியல் துறையில் கவனம் செலுத்தாமல் இருந்த தன்னை அப்பா தோளோடு தோள் நின்று தட்டிக்கொடுத்ததை நினைத்து ஒரே இடத்ததை பார்த்துக்கொண்டிருக்க  ,நண்பர்கள் கை  அவனை தட்டி "இன்னும் கொஞ்ச நேரத்திலை ஸ்பெஷிப் ஒளியின் வேகத்தில் 90 % ஐ அடையப்போகிறது "என மகிழ்ச்சியில் கட்டிப்பிடித்து ஜபநிஸ் பாட்டு ஒன்றையும்  பாடிக்கொண்டிருந்தார்கள் .

90 % மா !அப்பிடின்னா இனி எங்களுக்கு ஒரு நாள் எண்டா பூமியில் இருக்கிறவங்களுக்கு இரண்டு நாள் . நாங்க பூமியில் இருந்து புறப்பட்டு 2 வருடங்கள் ஆகிறதே! காலம் ஒரு புரியாத புதிர் என தனக்குள்ளேயே விஜய் நினைத்ததும் அவனது தந்தையின் ஞாபகம் மீண்டும் வந்தது .

"அப்பா நேரம்னா என்னப்பா ? டிக் டிக் ன்னு போகுமா ? "என ஆண்டு ஐந்தில் படிக்கும் போது  செல்லக்குரலில் அவன் கேட்ட கேள்வியை அப்பா கடவுள் மீது பழி போட்டு  புறக்கணிக்காமல் கைகளை பற்றிப்பிடித்து ஆற்றோரமாக அழைத்து சென்று அவனை தூக்கிப்பிடித்தபடி "நேரம்ங்கிறது இந்த ஆறு மாதிரிப்பா போய்க்கொண்டே இருக்கும் .ஒவ்வொரு இடத்திலையும் ஒவ்வொரு வேகம் .இது ஐங்ஸ்டெயின்ன்னு ஒரு பெரியவர் சொன்னது ".

அவன் கேட்ட சின்ன சின்ன கேள்விகளையும் அப்பா புறக்கணிக்காமல் ,அன்பாக பதில் தந்ததை எண்ணி கண் கலங்கியது . இயந்திரங்களோடு பழகியிருந்தாலும் அவனது உணர்வுகள் பூ போலவே இருந்தது .ஒரு தமிழனாக இருந்து இவ்வளவு தூரம் வந்ததற்கு காரணம் ,தனது மழலை கேள்விகளை தந்தை புறக்கணிக்காமல் சலிக்காமல் தேடிப்பிடித்தாவது அவனுக்கு விளக்கிவிடுவார் .

நேரம் பற்றிய இந்த விளக்கம் தான் அவனிடம்  நேரபயணம் பற்றிய எண்ணத்தை தூண்டியது .அவன் இந்த வானியல் துறைக்கு வந்ததன் காரணமும் அவன் தந்தை தான் .

என்ன தான் கரண்டியில் தேசிக்காய் வைத்து இலக்கை நோக்கி ஓடினாலும் அன்பு எனும் தேசிக்காய் விழுந்த பின் இலக்கை அடைந்து என்ன பயன் என சலித்துக்கொண்டான் .

மொத்தமாக பூமியில் இருந்து வந்து நான்கு வருடங்களும் ஓடிவிடவே விண்வெளி கப்பலும் கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தின் 99 % ஐ அடைந்தது .ஒளியின் வேகத்தை அடைந்ததும் விண்வெளிக்கப்பல் கொஞ்சம் ஆட்டம் கண்டு பின்னர் சரியாகிவிட்டது .

வழக்கம் போல தனது யோசனைகளை களைந்துவிட்டு தொழில்நுட்பத்தை பரிசோதிக்கும் வேலைகளில் இறங்கிவிட்டான் .எல்லாம் சரியாக இருந்தது . அதில் இருந்த அனைவருக்கும் என்ன பேசுவதென்றே தெரியாத அளவு மகிழ்ச்சி . காரணம் அவர்கள் அனைவரும் ஐங்ஸ்டேயினின் கனவை,கணிப்பீட்டை உணர்ந்துகொண்டிருக்கிறார்கள்  .

அவர்கள் விண்வெளிக்கப்பலில்   கழிக்கும் ஒவ்வொரு மணித்தியாலமும் பூமியில் ஒருவருடத்திற்கு சமம் .நேரத்தில் அவர்கள் எதிர்காலத்திற்கு பயணித்தார்கள்  .

அவன் தந்தையை பற்றி யோசித்துக்கொண்டிருந்தாலும் அவன் மனைவி இறந்த சோகத்தில் இருக்கும் போது அவனது தந்தை அருகில் வந்து "உறவுகள் எப்போதும் தொடர்ச்சியானதுடா கவலைப்படாதை ஒன்றோடொன்று எப்போதும் தொடர்பிருக்கும்.முடிவென்று ஒன்று இல்லை " என்று சொன்ன ஆறுதல் வார்த்தைகள் அவன் மனதில் ஓடிக்கொண்டிருந்தது .

சில நாட்களில் பூமியிலிருந்து அவனது மகன் அனுப்பிய குரல் செய்தி அவனுக்கு கிடைத்தது ."அப்பா எப்படி இருக்கீங்க ?வாழ்த்துக்கள் வெற்றி கண்டுடீங்க. ஐங்ஸ்டெயின் கனவை நனவாக்கீடீங்க ." என்றதும் அவனது குரல் நிறுத்தப்பட்டு "நாசா மையத்தால் அனுப்பப்பட்ட முதல் பரீட்சார்த்த மிக வேகமான தொடர்பாடல் முறை " என ரெக்கார்டிங் சொன்னது .

அவனுக்கு மிகவும் மகிழ்ச்சியும் ஆச்சரியமாகவும் இருந்தது . தனது மகனும் ஒரு விஞ்ஞானி என எண்ணி பெருமிதத்துடன் தனது குழுவுடன் சில நாட்களில் பூமியை மீண்டும் வந்தடைந்தான்  .ஆனால் பூமியில் ஆண்டு அப்போது 2020

2050  இல் இவர்களை அனுப்பியவர்கள் யாரும் இப்போது பூமியில் உயிரோடு இல்லை .ஆனாலும் ஒரு நினைவு சின்னத்தில் இவர்கள் பெயர்கள் "2050 இல் பூமியில் இருந்து புறப்பட்டவர்கள்.இவர்கள் வந்தடையும் ஆண்டு 2120 "  என குறிப்பிட்டிருந்தது .

 மக்கள் அனைவரும் வரவேற்ப்பு நிகழ்ச்சிகள் என அமர்க்களப்படுத்தியதோடு இளமையாகவே சென்று இளமையாகவே வந்தவர்களை பார்த்து ஆச்சரியப்பட்டனர் .

விஜய் வந்ததுமே தனது பேரப்பிள்ளைகளுடன் வந்திருந்தான் அவனது மகன் .மகன் மிகவும் வயது போனவனாய் இருந்தான் .மகனை பார்த்த மகிழ்ச்சி என்றாலும் விஜய்யிடம்  ஏதோ ஒரு நிறைவேறாத ஆசை ஒன்று இருந்தது .

 ஒரு மகிழ்ச்சியான செய்தியை முகத்தில் மறைத்துக்கொண்டு வந்த மகன்  "அப்பா நான் பரடொக்ஸ் பிரச்சனைகளை நிவர்த்தி செய்து  இறந்தகாலத்துக்கு செல்லும் இயந்திரத்தை கண்டுபிடித்துவிட்டேன் ". என்று கூறியதும் பூரித்துப்போனான் விஜய் .

பரடொக்ஸ் னா என்ன தாத்தா என விஜய்யின் கொள்ளுப்பேரன் கேட்க்க விஜய்யின் மகன் அவனை தூக்கி வைத்து "இப்போ தாத்தாக்கு மறுபடியும் வயசு குறைஞ்சா இளமையாகீடுவன் இல்லையா " என சொல்லிக்கொண்டே போனார் .
"ஆமா அப்புறம் "என வியப்பாக கேட்டான் அவன் ."அந்த இளமையான தாத்தாவை எனக்கு பிடிக்காம நானே  சுட்டு கொன்னுட்டேன்னா .அந்த இளமையானவரை சுட்டது யாரு ? இது தான் இறந்தகாலத்துக்கு போறதிலை இருந்த பிரச்சனை ".அடிப்படை ஒழுங்கு விதிமுறைகள் மீறப்படும் .

"புரியல்லையே  தாத்தா ஒரே குழப்பமா இருக்கு" என இதழை பிதுக்கி வைத்துக்கொண்டு சொன்னான் ."குழப்பமா இருக்கா ? அது தான் பரடொக்ஸ் ". அந்த குழப்பத்தை தான் தாத்தா இல்லாம பண்ணியிருக்கேன் .

இதை உணர்ந்து கவனித்துக்கொண்டிருந்த விஜய்க்கு கண்ணீர் ஊற்றியது .தனது அப்பாவை கட்டிப்பிடித்துக்கொண்டு அழ வேண்டும் போல இருந்தது அவனுக்கு .மீண்டும் தந்தையுடன் தான் இருந்த காலங்கள் வருமா என்று எண்ணி வருத்தப்பட்டான் .

தனது தந்தை விஜய்யின் இந்த பிரச்னையை உணர்ந்த மகன் ,தந்தையை  இறந்த காலத்துக்கு அனுப்பினான் .மீண்டும் சின்னவயதுக்கு சென்ற விஜய் தனது தந்தையின் ஒவ்வொரு விளக்கங்களையும் தெரிந்திருந்தாலும் மீண்டும் மீண்டும் ரசித்து கேட்டுக்கொண்டிருந்தான் .தான் எதிர்காலத்திலிருந்து வந்தவன் என்று தந்தையிடம் அவன் இறுதிவரை சொல்லவில்லை .

தன்னையே இழந்து தான்  வெளியில் தேடினாலும் மனிதனுக்கே உரித்தான அன்பு ,காதல் ஒன்றும் தேடினாலும் கிடைப்பதில்லை என்பதை உணர்ந்து சிரித்துக்கொண்டே நேரம் பற்றிய அப்பாவின் விளக்கத்தை கேட்டுவிட்டு அவரின்  கைகளை பிடித்து கொண்டு ஆற்றங்கரையில் இருந்து நடந்தான் .


Thursday, August 4, 2011

கால பயணம் (Time travel)- இறந்த காலத்துக்கு செல்வதில் பரடோக்ஸ் பிரச்சனை

கால பயணம் பற்றிய முன்னைய ஆக்கம் . காலபயணம் பற்றிய அடிப்படை இல்லாவிட்டால் வாசிக்கவும் - அழுத்துக

காலத்தில் பயணம் செய்வதில் உள்ள பிரச்சனை இறந்த காலத்துக்கு பயணம் செல்வது தான் . எதிர்காலத்தில் பயணம் செய்வதை இதுவரை யாரும் விமர்சிக்கவில்லை.


இந்த பிரச்னையை இலகுவாக விளக்குவதானால் ,உதாரணத்திற்கு நீங்கள் 200 வருடங்கள் பின்னோக்கி  சென்று விட்டீர்கள் என்று வைத்துக்கொண்டால் நீங்கள் உங்கள் பிறப்புக்கு முன்னரான  காலப்பகுதியில் இருக்கிறீர்கள் . 

அதாவது ஒரு விளைவுக்கு (பிறப்பு ) முன்னரே நிகழ்வு (வாழ்தல் ) நடக்கிறது . இது மிகவும் முரண்பாடானது .

இதனை  விளக்குவது தான் பிரபலமான கிராண்ட் பாதர் பரடொக்ஸ். உதாரணத்திற்கு நீங்கள் உங்கள் இறந்த காலத்துக்கு சென்று விட்டீர்கள் .அந்த காலத்தில் நீங்கள் உங்கள் சொந்த தாத்தாவையே கொலை செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது . நீங்களும் ஒரு துப்பாக்கியை  எடுத்து சுட்டு விட்டீர்கள் .

ஆனால் நீங்கள் உண்மையிலேயே பிறக்கவில்லை . உங்கள் தாத்தா உயிரோடு இருந்தால் தானே உங்கள் தந்தை பிறப்பார்  .தந்தை இருந்தால் தானே நீங்கள். ஆகாவே இந்த தொடர்பு வட்டம் துண்டிக்கப்படுகிறது(inconsistent causal loop ) . ஆகவே இது  இறந்த காலத்திற்கு செல்வதில் பிரச்சனையான விடயமாக கொள்ளப்பட்டது .

 =======================================================================

Wednesday, August 3, 2011

கள்ள மனதின் ஓரம் - கேளிக்கைக்கு மட்டுமா சமூக இணையத்தளம் ?

கேளிக்கை /மகிழ்ச்சி என்ற பதம் நுகர்பொருள் கலாச்சார சமுதாயத்தில்  திருபடைந்துவிட்டது எனலாம் . நகர்ப்புறம், வெளிநாடு என்ற புதிய அத்தியாயத்தில் நகர்ந்து வரும் உலகில் வெறும் படிப்பறிவை கௌரவத்திற்காக கற்கும் நிலையில் சுய அறிவு ,சுய சிந்தனை உண்மையான அறிவு என்பதெல்லாம் தூக்கி எறியப்பட வேண்டும் என்பதை கல்வித்திட்டம் ஒரு கட்டளையாக பிறப்பிக்கும் காலப்பகுதி இது . 

படிக்கிறேன் வேலை தேட வேண்டும் அதனூடு இடை இடையில்  கேளிக்கைகள் . இதான் வாழ்க்கை ,இது தான் மகிழ்ச்சி என்ற எண்ணக்கரு நிலவும் காலம் இது .மனிதம் நிலைநாட்டப்படும் போது ,அடுத்தவர்  முகத்திலும் மகிழ்ச்சி காண்பதே உண்மையான மகிழ்ச்சி என்பதை உணராத உலகு இது . 

இதே எண்ணக்கரு சமூக இணையத்தளங்களிலும் உலவி வருகிறது . சமுதாய வெளிப்பாட்டையே சமூக இணையத்தளம் காட்டவேண்டும் என்பது போய் கேளிக்கைகாக பயன்படுகிறது . கேளிக்கையாக இருப்பது தவறில்லை,கேளிக்கைகாகவே மட்டும் இருப்பது தவறு. சில நேரங்களில் முக்கிய பிரச்சனைகள் வரும் போது விழிப்புணர்வோ ஒரு குரல் கொடுப்போ சமூக இணையத்தளங்களில் நடப்பதில்லை . அப்படி நடத்துபவர்களை தடுக்கும் சமூகமே அதிகம் . நீங்கள் செய்யுங்கள் என்று சொல்ல எனக்கு எப்படி உரிமை இல்லையோ .அதே போல மனிதாபிமான குரல்களை கேலி செய்யும் உரிமை உங்களுக்கு இல்லை .

எனக்கு என்னை சுற்றியுள்ள என் சின்ன வட்டத்துக்கு அடிபட்டால் வருவது இரத்தம் மற்றயவர்களுக்கு /சமூகத்துக்கு வந்தால் அது தக்காளி சட்னி . 

ஒரு சமூக பிரச்னையை ,துன்பத்தை கொண்டு செல்லும் ஊடகமாக பயன்பட வேண்டிய சமூக வலைத்தளங்களில் குரல் கொடுப்பவர்களை பார்த்து இதனை செய்வதன் மூலம் என்ன நடக்க போகிறது என்ற கேள்வியை சுய அறிவற்று கேட்பவர்களும் உண்டு .

அவர்களை பார்த்து இதற்கும் ஒரு புரட்சியை எப்படி நடத்த வேண்டு என்று ஒரு பாடம் கல்வித்திட்டத்தில் சேர்க்க வேண்டுமோ என கேள்வி கேட்க்க வைக்கிறது .  

அண்மையில் ஒரு நண்பரின் உறவினருக்கு இரத்தம் தேவை என்றவுடன் அதனை பகிர்ந்தவரிடம் போய் இதனால் என்ன ஆக போகிறது என்று கேட்க்கவில்லை .ஆனால் அதே நபர்கள் பொது பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பதில்லை .தனக்கென்று வரும் போது அது பெரிது .

சிலர் குணமே கேளிக்கையானவர்கள் கோபமே வராதது போல இருக்கும் .ஆனால் ரஜனி படங்களின் இறுதி காட்சியில் வரும் ஆக்ரோஷம் சமுதாய சீரளிவுகளின் இறுதிக்கட்டத்தில் கூட வருவதில்லை .

ஒரே விடயத்தில் பலரும் ஒரே குரலில் ஓங்கி ஒலிக்கும் போது நிச்சயம் சமூக இணையத்தளமும் முக்கிய ஊடகமாக செயல்ப்படும் காலம் வரும் .

Tuesday, August 2, 2011

வெளிப்படையாக பேசுதல்? மறைத்து பேசுதல் ? - நீயா நானா

நீயா நானாவில் நல்ல தலைப்புக்கள் வரும் போது வார இறுதி நாள் ஒழுங்காக செல்லவில்லை என்ற குறையை அந்த இரவுகள் நிவர்த்தி செய்கின்றன . 

அது போல இந்த ஞாயிற்றுக்கிழமை(31 /7 /2011 ) ஒளிபரப்பாகிய தலைப்பு மிகவும் சுவாரசியமானதும் ,எமது அன்றாட வாழ்க்கையில் கடந்து வரும் முக்கிய பிரச்சினையுமாகும் .காரணம்  தொடர்பாடல் தான் இந்த காலத்தில் எமது வேலைகளையும் அனைத்தையும் கொண்டு செல்கிறது .


வெளிப்படியாக பேசுவது சரியா ? மறைத்து பேசுவது சரியா என்ற விடயத்தில் மிகவும் தெளிவாக இருபக்கம் ஆராயப்பட்டது .

வெளிப்படையாக பேசுபவர்கள் ஏமாளிகள் என்றும் அளந்து  பேசுபவர்கள் வஞ்சம் வைத்து பேசுபவர்கள் என்றுமே ஒருவரையொருவர் நினைத்துக்கொண்டிருக்கிறோம் .

ஆனால் இதை பொதுவாக பார்ப்பவர்கள் என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் வெளிப்படையாக பேசுபவர்களை நம்பலாம் அமைதியாக ,கமுக்கமாக பேசுபவர்களை நம்ப முடியாது என்ற எண்ணமே நிலவுகிறது . 

இந்த இரு பிரச்சனைகளாலும் பாதிக்கப்பட்டவர்களே அதிகம் . வெளிப்படையாக பேசுதல் கூடுதலானோரை பாதித்து விடுகிறது . 

முன் வைக்கப்பட்ட சில கருத்துகள் மிக பயனுள்ளதாக இருந்தது . வெளிநாட்டவர்கள் கலாச்சாரம் எப்படி வெளிப்படையாக பேச வேண்டும் என்று கற்று தந்திருக்கிறது ஆனால் எமது காலாசராம் எப்படி மறைத்து பேச வேண்டும் என கற்றுத்தந்திருக்கிறது . உண்மையாக ஒரு சமூகம் வெளிப்படையாக பேசுவதை புரிந்துகொள்ளும் அளவுக்கு முன்னேறாத போது நாமும் அதனை குறைத்துகொள்வது நல்லது .

நாம் வெளிப்படையானவர்கள் என்பதை காட்டிக்கொள்ள தேவையற்ற இடங்களில் அவர்களுக்கு அந்த விடயங்கள் தேவையில்லாத சந்தர்ப்பங்களில் பேசுவது தவறு .ஒருவர் வெளிப்படையாக பேசும் பொது அவரின் நிலையும் மிகவும் முக்கியமானது .

மிகவும் பயனுள்ள தலைப்பாக  இருக்கும் . பார்க்க 






ஏன் ?